கனடாவில் உள்ள விமான நிலையங்களில் முன்னெடுக்கப்படும் அமெரிக்கச் சுங்க அனுமதி நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம் என்று கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா (Pete Hoekstra) தெரிவித்துள்ளார்.
1952 ஆம் ஆண்டு முதல், அமெரிக்கா தனது பல்வேறு ஒப்பந்தங்களின் கீழ் கனடாவில் உள்ள சில விமான நிலையங்களில் இந்த முன்கூட்டிய நுழைவு அனுமதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம், பயணிகள் அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்னரே கனடாவில் அமெரிக்க சுங்கச் சோதனைகளை முடித்துவிடலாம்.
இதன் விளைவாக, அவர்கள் அமெரிக்கா சென்றடைந்ததும் சர்வதேச பயணிகளுக்கான நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்கும் நிலை காணப்பட்டது.
இந்த வசதியை நீக்குவது குறித்தே, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தமையே இந்த மறுபரிசீலனைக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பான்ஃப் நகரில் நடைபெற்ற உலகளாவிய வணிக நிகழ்வில் (Global Business Forum) உரையாற்றிய ஹூக்ஸ்ட்ரா, கனடாவில் உள்ள முன்கூட்டிய நுழைவு அனுமதி மையங்களில் (pre-clearance locations) பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
