பெருந்தோட்ட பகுதிகளில் அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வசிப்பிடங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவக சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 66.9 சதவீதமானவை மண்சரிவு அபாயத்துக்கு உட்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அந்த 5 ஆயிரத்து 64 வீடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 97 வீடுகளும் அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டில் மீரியபெத்தை மண்சரிவில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
குறித்த பகுதி மண்சரிவு அபாயமுள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டு அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவித்திருந்த அரசாங்கம் அவர்கள் வசிப்பதற்கான மாற்றிடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
எனவே, இது இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மரணம் என்பதை கூறுவதை விட அப்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினால் புரியப்பட்ட கொலைகளாக கருத வேண்டும் என மாகாண சபையில் முன்னதாக பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தேன்.
எதுஎவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் மக்களை ஆபத்தில் தள்ளாமல், பொறுப்புவாய்ந்து செயற்பட விரும்புகிறது.
அந்தவகையில், பெருந்தோட்டத் துறையில் அதிக மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசித்துவரும் 2125 குடும்பங்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி,ஜனாதிபதி தலைமையில் தலா 32 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளும் 10 பேர்ச் காணியும் வழங்கும் நிகழ்வொன்று பண்டாரவளையில் நடத்தப்படவுள்ளது.
அதேநேரம், பதுளையில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பதுளை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 15 இடங்கள் பாதுகாப்பு வேலி இடுதல் உள்ளிட்ட பணிகள் மூலம் 150 மில்லியன் ரூபாய் செலவில் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
