தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ முதல் தொடங்கொட வரையிலான வீதிப் பகுதியைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டு போக்குவரத்துக்குத் திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ முதல் தொடங்கொட வரையிலான வீதியில் இதுவரை எவ்வித பிரதான புனரமைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 0 கிலோமீற்றர் தொடக்கம் 19 கிலோமீற்றர் வரையான அதிவேக நெடுஞ்சாலையின் பகுதி மற்றும், 19 கிலோமீற்றர் தொடக்கம் 34 கிலோமீற்றர் வரையான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியின் விரைவான புதுப்பித்தல் இரண்டு (2) தொகுப்புகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
அதற்கமைய, 19 கிலோமீற்றர்கள் 04 பாதைகளுடன் கூடிய அதிவேக நெடுஞ்சாலை வீதியை உள்ளடக்கியதாக 0 கிலோமீற்றர் முதல் 19 கிலோமீற்றர் வரை பழுதடைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியை இரண்டாவது தொகுப்பின் கீழ் சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களிடம் தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையின் கீழ் விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 05 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தை, 1,490.96 மில்லியன் ரூபாய்களுக்குக் கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Access – WKK குழுமத்திற்கு வழங்குவதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
