கமாண்டோ சாலிந்த என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் இன்று மேல் மாகாண குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பிட்ட இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அவர் கணேமுல்ல கமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த காலத்தில், கமாண்டோ சாலிந்தாவுக்கு 260 T56 ரக துப்பாக்கி ரவைகளை இரண்டு சந்தர்ப்பங்களில் 650,000 ரூபாய்க்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கூடுதலாக, அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டனார்.
கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ரஷ்யா, ஓமன், துபாய் மற்றும் இந்தியாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 இலங்கை பாதாள குழுக்களைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தந்த நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினைகள் முடிவுக்கு வந்தவுடன் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால இதன்போது தெரிவித்தார்.
