49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களால் கௌரவிப்பு
இலங்கையின் 49 வது தேசிய விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் சார்ப்பாக குத்துச் சண்டைப் போட்டியில் பங்குபற்றிய பூதன்வயல் கிராமத்தினைச் சேர்ந்த செல்வி ச.யஸ்மிதா முதலாம் இடம்பெற்று தங்கப்பதக்கத்தினை சூவீகரித்தார்.
தொடர்ந்து உடையார்கட்டு கிராமத்தினைச் சேர்ந்த செல்வி இ.லதுர்சனா குத்துச்சண்டைப் போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை தட்டிச் சென்றனர்.
மேலும் ஆண்களுக்கான கடினப்பந்துப் போட்டியில் வடமாகாண அணி தேசிய விளையாட்டு விழாவில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. இதில் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையை சேர்ந்த அ.அஞ்சயன் அவர்கள் வடமாகாண அணியில் இடம்பிடித்து சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த சாதனையை புரிந்த மூன்று வீர வீராங்கனைகளையும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு .அ.உமாமகேஸ்வரன் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு வரவழைத்து இவர்களை கௌரவித்து பாராட்டினார்.
இதன்போது குத்துச்சண்டையில் வெற்றிபெற காரணமாக இருந்த குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களான திரு.கா.நாகேந்திரன், திரு.ய.தேசிந்தன் ஆகியோரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட செயலக காலை ஒன்றுகூடலின் போது இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயக்காந்(காணி), மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
