2023ஆம் ஆண்டு ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடித்த ‘ஜோ’ திரைப்படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்த வெற்றி ஜோடி மீண்டும் இணைந்து ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
சமுதாயத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கஷ்டங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தக் காமெடி-டிராமா திரைப்படம், ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஷீலா ராஜ்குமார், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைப்பில், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ‘ஜோடி பொருத்தம்’, ஜூன் 9ஆம் திகதி வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதிய இந்தப் பாடலை எம்.லக்ஷ்மிகாந்த் பாடியுள்ளார். மேலும், படத்தின் டீசர் ‘கூலி’ திரைப்பட இடைவேளையின்போது திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு, இரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரால் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.
‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படம் ஒக்டோபரில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

