கியூபெக் மாகாணத்தில் துணை மருத்துவ ஊழியர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியடைந்தன.
அதனால், இந்த வேலைநிறுத்தம் மேலும் பல மாதங்களுக்குத் தொடரக்கூடும் என, தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
கியூபெக் அரசு முன்வைக்கும் ஊதிய உயர்வுத் திட்டத்திற்கு ஈடாக, துணை மருத்துவ ஊழியர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, அரசுக்கும் துணை மருத்துவத் துறையின் தொழிற்சங்கமான FSSS-CSN-க்கும் இடையே, கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
CSN சங்கத்துடன் இணைந்த சுமார் 3,300 துணை மருத்துவ ஊழியர்கள், கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல், புதிய ஒப்பந்தம் எவற்றிலும் இணைக்கப்படாமல் உள்ளனர்.
இந்நிலையில், கியூபெக் அரசு, அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 17.4% சம்பள உயர்வை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
