கிழக்கு ஒன்ராறியோ மற்றும் தெற்கு கியூபெக் பகுதிகளில் அபாயகரமான வெப்பமான காலநிலையும், அதிக ஈரப்பதமும் நிலவுகிறது.
கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் (Environment Canada) இப் பிரதேசங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்முறை கோடைக்காலத்தின் முதல் வாரத்திலேயே வெப்பநிலை சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில பகுதிகளில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும், ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் (Humidex) 45 டிகிரி செல்சியஸாக உணரப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இரவில் கூட வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸுக்குக் குறையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் வெப்ப நிலை செவ்வாய்க்கிழமை இரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு கியூபெக்கிலும் சூடான மற்றும் ஈரப்பதமான காற்று பரவக்கூடும் என்பதால், சனிக்கிழமை பிற்பகல் முதல் அந்தப் பகுதிக்கும் கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த பிராந்தியத்திலும் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் 40 முதல் 45 டிகிரி செல்சியஸுக்கு இடையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்பட்டுள்ள இந்த தீவிர வெப்பம் காரணமாக, திங்கட்கிழமைக்கான வகுப்புக்கள், பாடசாலைப் பேருந்து போக்குவரத்து மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை (daycare) மேற்கு கியூபெக் பாடசாலை சபை ரத்து செய்துள்ளது.
மேலும், கடும் வெப்பம் நிலவும்போது மக்கள் தங்களை குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளவும் கனடாவின் சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
