கனடாவின் பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் இருந்து உருவாகும் புகை, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி ஐரோப்பாவை எட்டியுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்திலேயே ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு கனடாவிலிருந்து புகை மேகங்கள் சென்றடைந்த நிலையில், இந்த வாரம் மேலும் அதிகப் புகை ஐரோப்பாவை நோக்கிப் பரவும் என
செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் கொலம்பியா முதல் ஒன்டாரியோ வரையிலான கனடாவின் பல மாகாணங்களில் காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல் பற்றி எரிகிறது.
மனிடோபாவில் மட்டும் 17,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அல்பெர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் உட்பட பிற மாகாணங்களிலும்
ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை, 2.1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது. ஐரோப்பாவில் வானம் மங்கலாகத் தெரிவதற்கும், சூரிய அஸ்தமனம் சிவப்பு-
ஆரஞ்சு நிறத்தில் இருப்பதற்கும் இந்த புகை காரணமாக இருக்கும் என CAMS இன் மூத்த விஞ்ஞானி மார்க் பாரிங்டன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தப் புகை வளிமண்டலத்தின் மிக உயரமான அடுக்குகளில் பயணிப்பதால், ஐரோப்பாவில் தரையில் உள்ள காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
