எஹெலியகொட, பரக்கடுவ, அங்குருவாங்குவ பகுதியில் திருடப்பட்ட வேனில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து இன்று (28) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேன் திருடப்பட்டதாக அதன் உரிமையாளர் இன்று காலை அவிசாவெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார், குறித்த வேனை வழிமறிக்க முயன்றபோதும் சந்தேக நபர்கள் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் பரக்கடுவ பகுதியில் வேனை வழிமறித்த பொலிஸார், சந்தேக நபர்களைப் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடியதுடன், மற்றொருவர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த சந்தேக நபர் காயமடைந்துள்ளார்.
தப்பியோடிய மற்றைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
