வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்னால் அமைந்துள்ள குடியிருப்பு கலாசார மண்டபத்தை மீண்டும் நிரந்தரமாகப் பாடசாலையின் பயன்பாட்டிற்கு வழங்குமாறு கோரி, பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் பொதுமக்களிடம் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் முதலாவது பாடசாலையாகக் கருதப்படும் இப்பாடசாலை சுமார் 148 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. எனினும், நீண்டகாலமாகப் போதிய இடவசதியின்றிப் பாடசாலை இயங்கி வருவதால் மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகப் பழைய மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த கலாசார மண்டபம் திறப்பு விழாவிற்கு முன்னரே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சுமார் 25 ஆண்டுகளின் பின்னர், 2018ஆம் ஆண்டு இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன், பின்னர் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து, பாடசாலையில் காணப்பட்ட இடநெருக்கடியைக் கருத்திற்கொண்டு குறித்த மண்டபத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு பாடசாலைச் சமூகத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய, 2023ஆம் ஆண்டு வவுனியா பிரதேச செயலகத்தினால் குறித்த மண்டபத்தைத் தற்காலிகமாகப் பாடசாலையின் கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த மண்டபத்தில் மத்திய அரசாங்கத்தின் மும்மொழிக் கலாசார நிலையமொன்றை புதிதாக அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகப் பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இடநெருக்கடிக்கு மத்தியில் இயங்கிவரும் 148 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, குறித்த மண்டபத்தை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் நிரந்தரமாகப் பாடசாலையிடமே கையளிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பழைய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கான பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
