கியூபெக் சிட்டி முதல் டொராண்டோ வரை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் திட்டமானது (High-Speed Rail Project), விவசாய நிலங்களைப் பாதிப்பதுடன் அதிகப்படியான நிதிச் செலவையும் ஏற்படுத்தும் என கியூபெக் மாகாண விவசாயச் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஒன்று, இத்திட்டத்தின் செலவுகள் மற்றும் மாற்று வழிகள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
கியூபெக் விவசாயிகளின் அமைப்பான ‘யூனியன் டெஸ் ப்ரொடக்டியர்ஸ் அக்ரிகோல்ஸ்‘ (UPA) மற்றும் ‘விஷன் டிரான்ஸ்போர்ட்’ அமைப்பு இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
தேசிய பொது நிர்வாகப் பள்ளியின் (ENAP) முதுநிலை மாணவர் வின்சென்ட் டுகாய் (Vincent Duguay) மற்றும் ரயில்வே துறை நிபுணர் பியர் டுசாப்லான் (Pierre DuSablon) ஆகியோர் இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
தற்போது ‘ஆல்டோ’ (Alto) நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அதிவேக ரயில் திட்டத்திற்கான மாற்று வழிகளை, இந்த ஆய்வு முன்வைக்கிறது.
தற்போதைய திட்ட மதிப்பீடு மிகவும் அதிகமாகவும், விவசாயிகளின் நிலங்களைப் பறிப்பதாகவும் உள்ளதாக கியூபெக் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் கிராமப்புறப் பொருளாதாரமும் விவசாய உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறைந்த செலவிலும், குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதுமான மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.
