2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை மாதாந்தம் 150,000 ரூபாவிலிருந்து 162,500 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் சம்பள வருமானம் பெறுவோருக்கு மேலதிக வரிச் சலுகை கிடைக்கவுள்ளது.
நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரவு செலவுத் திட்ட உரையின்படி, வருடாந்த தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 1.8 மில்லியன் ரூபாவிலிருந்து 1.95 மில்லியன் ரூபாவாக உயர்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், மாதாந்தம் 162,500 ரூபா வரை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவோர் தமது சம்பள வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது.
அத்துடன், தனிநபர் வருமான வரியின் படிப்படியான வரி அறவீட்டு முறையிலும் மாற்றங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள வரி அடுக்குகளில் ஆரம்ப 6 சதவீத வரி விகிதத்தைத் தொடர்ந்து விதிக்கப்படும் 18 சதவீத வரி விகிதத்திற்குப் பதிலாக 12 சதவீத வரி விகிதத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புதிய வரி விகிதங்கள் முறையே 6, 12, 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களாக அமையும்.
மேலும், அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதம் நடைமுறைக்கு வரும் மாதாந்த வருமான எல்லையையும் 358,000 ரூபாவிலிருந்து 433,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் மூலம், வரி செலுத்தும் தனிநபர்களுக்கு அவர்களின் வரிக்குட்பட்ட வருமானத்தைப் பொறுத்து மாதாந்தம் 750 ரூபா முதல் 15,750 ரூபா வரையான மேலதிக வரிச் சலுகை கிடைக்கும் என வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிச் சீர்திருத்தங்களுடன் இந்தப் புதிய சலுகைகளையும் இணைத்துக் கணக்கிடும்போது, தனிநபர் வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும் மொத்த மாதாந்த வரிச் சலுகை 4,250 ரூபா முதல் 36,250 ரூபா வரை அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், இந்த மேலதிக வருமான வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
