வடக்கு கடல் பரப்பில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தால் எமது மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மீனவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு யார் பொறுப்பு கூறுவது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம் ஆலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (3) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இருக்கின்ற, குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மீனவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக விடயங்களை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றது.
குறிப்பாக நாங்கள் இந்திய மீனவர்களின் வருகை தொடர்பாக தொடர்ந்து நீண்ட காலமாக பேசி வருகின்ற விடயங்களுக்கு அப்பால், தொடர்ச்சியாக இந்த 10 தினங்களுக்குள் மன்னார் மாவட்டமும் சரி, யாழ் மாவட்டத்திலும் இருக்கின்ற மீனவர்களும் சரி தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்படுகின்றார்கள்.
இந்திய மீனவர்கள் என்று நாங்கள் சொல்லும் போது, தமிழக மீனவர்கள் மாத்திரமல்ல, இப்போது பாண்டிச்சேரி, காரைக்கால் மீனவர்களும் எங்களது கடல் வளத்தை நோக்கி வருகை தருவது மாத்திரமல்லாமல், அதனை சீரழித்து அள்ளிச் சென்று, இங்கு இருக்கின்ற மீனவர்களின் வலைகள், அதன் உபகரணங்களை நாசமாக்கிய சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டு இருக்கிறது.
அண்மையில் கூட ஒரு குரல் பதிவாக ஒரு மீனவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே இவ்வாறான நிகழ்வுகள் நடந்திடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம்.
ஏனெனில் இவ்வாறான நிகழ்வு இரண்டு நாட்டுக்கும் அல்லது இரண்டு உறவுகளுக்குமான உறவை துண்டிக்க செய்துவிடும் என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கிறோம்.
எனவே, அண்மையில் நடந்த விடயங்களை நான் முன் கொண்டு வருவதாக இருந்தால், மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாரில் இருந்து தொழிலுக்குச் சென்ற 65 மீனவர்களில் 30 பேருடைய வலைகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு படகுக்கு 5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கப்பால், வாங்காலைப்பாடு, காட்டாஸ்பத்திரி என்று சொல்லக்கூடிய பேசாலை மீனவ சங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூட இவ்வாறு அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தொடர்ந்து நாங்கள் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.
கடற்படையும் கண்ணை மூடிக்கொண்டு இந்த விடயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு படகை கைது செய்தால் மாத்திரம் இந்தப் பிரச்சனை தீர்ந்து விடாது. எங்களது கடல் எல்லையை பாதுகாக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அந்த வகையில், யாழ்ப்பாணம் தொடக்கம் மன்னார் வரைக்கும் இவ்வாறு மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்ட சம்பவம் இந்த 10 நாட்களுக்குள் கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு இருக்கின்றன, நாசமாக்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கப்பால், முல்லைத்தீவில் சீசன் தொடங்கியிருந்த ரால் சீசனுக்காக இப்போதே இந்திய மீனவர்கள், காரைக்கால் மீனவர்கள் அங்கே வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள். 500-க்கு மேற்பட்ட படகுகளை தாங்கள் கண்டதாக அங்கு இருக்கின்ற மீனவ சமூகம் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறான ஒரு சூழலில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்ததும், அதற்கப்பால் இந்திய உச்சநீதிமன்றம் தனது கருத்தையும், தனது ஆலோசனையும் முன் வைத்ததையும் தாண்டி, அதனை மதிக்காத வகையில் இங்கு இருக்கின்ற இந்திய மீனவர்கள் என்று சொல்லக்கூடிய காரைக்கால் மீனவர்களும், தமிழ்நாட்டு மீனவர்களும் தாங்கள் நினைத்தவாறு, தாங்கள் கையாளும் விடயத்தை திரும்பத் திரும்ப செய்து வருகிறார்கள். அங்கு யாரையும் அவர்கள் மதிப்பதும் இல்லை என மீனவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
