யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளரின் கொலை சம்பவம் தொடர்பிலான குற்றப்பத்திரத்தை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், 21ஆம் திகதி அவரது சடலம் தனக்கிளப்பு காட்டு பகுதியில் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை கைது செய்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , பொலிஸாரினால் குற்றப்பத்திரிக்கை மன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை அடுத்த வழக்கு தவணையில் சந்தேகநபர்களுக்கு வாசித்து காண்பிக்கப்படும் எனவும், தொடர்ந்து சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெறும் என தெரிவித்த மன்று, வழக்கினை 19ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

