நவம்பர் 5ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மார்க் கார்னிக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், எதிர்வரும் கனடா தினமான ஜூலை முதலாம் திகதி வரை டீசல் மீதான அனைத்து மத்திய வரிகளையும் நீக்க வேண்டும் என்றும், எரிபொருள் கொள்வனவுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரியான GST-ஐ கோடை காலம் வரை இடைநிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், எரிபொருள் தரநிலை தொடர்பான வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், எரிபொருள் செலவுகள் குறைவதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் உதவும் என பியர் பொலிவ்ரே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, நாட்டின் கடன் மற்றும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் கணிப்பின்படி, 2026–2027 நிதியாண்டில் மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறை 63.3 பில்லியன் டொலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது முன்னர் கணிக்கப்பட்ட 71.8 பில்லியன் டொலர்களை விடக் குறைவானதாக இருந்தாலும், அடுத்த நிதியாண்டில் பற்றாக்குறை 70.2 பில்லியன் டொலர்களை எட்டக்கூடும் எனவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாக உறுதியளித்த போதிலும், அடிப்படைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பியர் பொலிவ்ரே குற்றஞ்சாட்டியுள்ளார்.
மறுபுறம், நிதியமைச்சர் François-Philippe Champagne, எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் வலுவான, நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய கனடாவை உருவாக்குவதற்கான அடுத்தகட்டத் திட்டங்களை முன்வைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நவம்பர் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள் வரிகள் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக என்னென்ன தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என்பது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
