இலங்கையில் மீண்டும் இனவாத மற்றும் மதவாத மோதல்கள் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற ‘கிளீன் ஸ்ரீலங்கா – அத்தம’ நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களும் பரஸ்பர ஒத்துழைப்பு, புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையுடன் வாழ்வதே ‘அத்தம’ நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இனவாதம் மற்றும் மதவாதம் போன்ற அடிப்படைவாதங்கள் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்குத் தடையாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி, அரசாங்கம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், இராணுவத்தினர், பொலிஸார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
