டொராண்டோ நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான உள்ளாட்சித் தேர்தலில், தற்போதைய மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) பிரம்மாண்ட வெற்றி பெற்று மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெளியான தேர்தல் முடிவுகளின்படி, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிராட் பிராட்போர்டை (Brad Bradford) எதிர்த்துப் போட்டியிட்ட ஒலிவியா சௌ, சுமார் 5,30,000 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
டொராண்டோ நகரத்தின் குடிநீர் முகாமைத்துவம் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை நிர்வகிக்கப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்குவதாகப் போட்டியாளர் பிராட்போர்ட் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த திட்டம் நகரச் சொத்துக்களைத் தனியார்மயமாக்க வழிவகுக்கும் எனக் கூறி ஒலிவியா சௌ மேற்கொண்ட கடுமையான பிரச்சாரம், வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் மூலம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு டொராண்டோ மாநகரத்தை வழிநடத்தும் மக்கள் ஆணையை ஒலிவியா சௌ (Olivia Chow) பெற்றுள்ளார்.
டொராண்டோ மாநகர சபை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
டொராண்டோ மாநகர சபையின் Scarborough—Rouge Park பகுதியில் போட்டியிட்ட தற்போதைய உறுப்பினர் நீதன் சான், தனது நெருங்கிய போட்டியாளரை விட 6,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
டொராண்டோ மாநகர சபையின் Scarborough Southwest பகுதியில் போட்டியிட்ட பார்த்தி கந்தவேல், சுமார் 36 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
டொராண்டோ மாநகர எல்லைக்கு வெளியேயுள்ள அஜாக்ஸ் (Ajax) நகரசபையின் 2 ஆம் வட்டாரத்திற்கான பிராந்திய சபை உறுப்பினர் (Regional Councillor) தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வங்கி நிதி மேலாளரான ரஞ்சித் பரணிவாசகம் வெற்றி பெற்றுள்ளார்.
வரவு செலவுத் திட்டங்களின் நிதிப் பரிசீலனை மற்றும் சொத்து வரி உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இவர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இதேவேளை, ஒலிவியா சௌவின் இந்த வெற்றியுடன், டொராண்டோ மாநகர சபைக்குப் பல முற்போக்குக் கருத்துடைய உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நேட் எர்ஸ்கின்-ஸ்மித் (Nate Erskine-Smith) மற்றும் மைக் லேடன் (Mike Layton) ஆகியோர் மாநகர சபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
டொராண்டோவின் புதிய மாநகர சபையில் முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால், வாடகைதாரர் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து கட்டணக் குறைப்பு மற்றும் குறைந்த செலவிலான வீட்டுவசதித் திட்டங்கள் போன்ற தனது வாக்குறுதிகளை ஒலிவியா சௌ எளிதாகச் செயல்படுத்த முடியும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை பிராம்டன் நகர மேயராக மீண்டும் PATRICK BROWN தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை மில்டன் நகரின் மேயர் தேர்தலில் ஜார்ஜ் மினகாகிஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 46 ஆண்டுகளாக மேயராகப் பதவி வகித்த கோர்ட் கிரான்ட்ஸின் நீண்டகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் Mississauga நகரின் புதிய மேயராக Alvin Tedjo வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்க்கது.

