தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதை அடுத்து, தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நேற்று (24.10.2026) மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது.
இது தெற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (26.10.2026) காலை மேலும் வலுப்பெற்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும், நாளை மறுநாள் (27.10.2026) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்க்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

