ஹபராதுவ, கொக்கல ரயில்வே கடவையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ரயிலுடன் மோதியதில், குறைந்தது 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சுமார் 14 முதல் 15 வயதுடைய சிறுவர்கள், சிகிச்சைக்காக கராப்பிட்டிய மற்றும் உனவட்டுன மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொக்கலையில் அமைந்துள்ள மார்ட்டின் விக்ரமசிங்க நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுவிட்டு, கொட்டாவ பகுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த குழுவினரே குறித்த பேருந்தில் பயணித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது, பேருந்தில் சுமார் 41 சிறுவர்கள், 14 பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆறு பெற்றோர்கள் எனப் பலர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக, 40 வயதுடைய பேருந்து சாரதியும், 21 வயதுடைய நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

