நாட்டின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும், கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் தனது சிறைவாசம் உதவும் என்றால், 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 23ஆம் திகதியிட்ட அறிக்கையொன்றில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தாம் காவலில் வைக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மேம்படுவதாகக் கூறப்பட்டாலும், பொதுமக்கள் தொடர்ந்து நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளையும் விமர்சித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகளைக் குறைத்தல், சம்பளத்தை உயர்த்துதல், வட்டியில்லாக் கடன்களை வழங்குதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் வரிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளையும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மதம் மற்றும் கலாசார விவகாரங்களில் நாகரிகமான விவாதங்கள் அவசியம் என வலியுறுத்திய அவர், நாட்டின் இயற்கை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதித்துறை இறுதியில் தனக்கு நீதி வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, சிறைவாசம் தனது அரசியல் நம்பிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

