முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளமாக 5,150,626 ரூபாய் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த தொகையில் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை என்றும் அந்தச் சாட்சி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை, எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச தரப்பில் பிரதி மன்றாடியார் நாயகம் ஒஸ்வல்ட் லக்ஷ்மன் பெரேரா சாட்சியங்களை நெறிப்படுத்தியதுடன், பிரதிவாதி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.
குறித்த வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.
