இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) 17ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தியே பொதுமக்கள் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்டகாலமாகத் தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலாலி பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினமும் 17ஆவது வாரமாகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதியவர் ஒருவர், “எமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக வேறு இடங்களில் வசித்து வருகிறோம். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் எம்மை எமது சொந்த இடங்களில் இன்னமும் மீள்குடியேற்றவில்லை. எங்கள் இறப்பாவது எங்கள் சொந்த மண்ணில் நிகழ வேண்டும் என்பதே எமது இறுதி ஆசையாகவுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கடும் வெயிலின் மத்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதால் பெண்ணொருவர் மயக்கமடைந்தார்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனையோர் அவருக்கு உரிய முதலுதவிகளைச் செய்து நிழலில் அமர வைத்தனர்.
இருப்பினும், அவர் போராட்டத்திற்கு ஆதரவாக அவ்விடத்தில் போராட்டம் நிறைவடையும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
