யாழ்ப்பாணம், வலி.வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தெல்லிப்பளையில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை சந்தியில் வியாழக்கிழமை காலை இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
அங்கிருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரையில் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், புதிய மதுபான சாலைக்கான அனுமதியை வழங்கக் கூடாது எனக் கோரி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
வலி.வடக்கு பகுதிக்கு மதுபான சாலை தேவையில்லை என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் அரசியல்வாதிகள், மதகுருமார்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு குரல் கொடுத்தனர்.

