ரஷ்யாவின் தென்கிழக்கு சைபீரியாவில் அமைந்துள்ள ‘இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில்’ பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், காரணம் கண்டறியப்படாத நிமோனியா நோயினால் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இர்குட்ஸ்க் பகுதிக்கு வெளியே உள்ள ஷெலெகோவ் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து, குறித்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு புதிய நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதோ அல்லது வெளியேற்றப்படுவதோ நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேயர் மக்சிம் மோடின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண், தான் பணியாற்றிய நிறுவனத்தில் ஆய்வு செய்த எந்தவொரு நோய்க்கிருமியும் அவரது பாதிப்புக்குக் காரணம் என்பதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என ரஷ்ய அதிகாரப்பூர்வ தரப்புகள் தெரிவித்துள்ளன.
எனினும், அவர் நுரையீரல் சார்ந்த பிளேக் நோயினால் (pneumonic plague) உயிரிழந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான ‘ரோஸ்போட்ரெப்நாட்சார்’ (Rospotrebnadzor), அப்பெண்ணுக்கு காரணம் அறியப்படாத நிமோனியா பாதிப்பு மட்டுமே இருந்ததாகவும், ஆய்வகத் தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அவருடன் தொடர்பிலிருந்த இருவருக்கு சாதாரண சளி வைரஸும், இருவருக்கு கோவிட்-19 தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையோருக்கு பாதிப்புகள் எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

