கியூபெக் மாகாணத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்தாலும், கூட்டாணி அவனிர் கியூபெக் (CAQ) கட்சியின் தலைவராகத் தொடர்ந்து நீடிக்கவுள்ளதாக, அக்கட்சியின் தலைவியும் மாகாண முதலமைச்சருமான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette)தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், திராய்-ரிவியேர்ஸ் (Trois-Rivières) தொகுதியில் போட்டியிடும் கிறிஸ்டின் பிரெஷெட், அத்தேர்தலில் கட்சி பின்னடைவைச் சந்தித்தாலும் தனது தலைமையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
உள்ளூர் வானொலி நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தாம் தொடர்ந்து கட்சியின் தலைவராகவே இருக்கப்போவதாகவும் இது தனது பதவி, தனது பொறுப்பு. என்றும் இதில் தாம் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும்” கூறியுள்ளார். ”கியூபெக் மக்களின், குறிப்பாக திராய்-ரிவியேர்ஸ் பகுதி மக்களின் முன்னுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அதிகளவிலான மக்களை தம் பக்கம் ஈர்ப்பதே தமது நோக்கம் எனவும் கிறிஸ்டின் பிரெஷெட் தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் தனது கட்சி ஆட்சியைக் கைப்பற்றத் தவறினாலும், தான் வெற்றிபெறும் பட்சத்தில் கியூபெக் தேசிய சட்டமன்ற உறுப்பினராக (MNA) தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில், ஆளும் ” கூட்டாணி அவனிர் கியூபெக்” கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையிலேயே பிரெஷெட்டின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ”கூட்டாணி அவனிர் கியூபெக்” கட்சி, 18 சதவீத வாக்காளர்களின் ஆதரவுடன் மூன்றாவது இடத்திலேயே உள்ளது. அத்துடன் இத்தேர்தலில் அக்கட்சி 6 இடங்கள் அல்லது அதற்கு குறைவாகவே பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் தேசிய சட்டமன்றத்தில் ஓர் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 12 இடங்கள் தேவை என்ற நிலையில், ”கூட்டாணி அவனிர் கியூபெக்” கட்சி ஆனது, தனது கட்சி அந்தஸ்தையே இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், தனது பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வரும் கிறிஸ்டின் பிரெஷெட், சலாபெரி-டி-வெலிஃபீல்ட் (Salaberry-de-Valleyfield) பகுதியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொருளாதாரக் கொள்கைகள் குறித்துப் பேசினார்.
”அமெரிக்காவினால் விதிக்கப்படும் வரிகளால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து, அடுத்த நான்காண்டுகளுக்கு மாகாணப் பொருளாதாரத்தைச் சரியாக வழிநடத்த தங்கள் கட்சியே சிறந்தது” என ”கூட்டாணி அவனிர் கியூபெக்” கட்சி வேட்பாளர் எரிக் ஜிரார்ட் (Eric Girard) இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் இருக்கும் ;பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois) ஆட்சிக்கு வந்தால், அது பொதுவாக்கெடுப்பு தொடர்பான நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி மாகாணத்திற்கான முதலீடுகளைக் குறைத்துவிடும் என்றும் ”கூட்டாணி அவனிர் கியூபெக்” கட்சி எச்சரித்துள்ளது.

