குடிநீர் போத்தலை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்திற்கு எதிராக, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த நிறுவனத்தின் நிர்வாகம் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து, நீதிமன்றம் குறித்த நிறுவனத்திற்கு 10 இலட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, 2492/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 96 ஆம் இலக்க உத்தரவின்படி, 500 மில்லிலீற்றர் முதல் 999 மில்லிலீற்றர் வரையான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், பம்பலப்பிட்டியில் உள்ள குறித்த உணவகத்தில் 500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தல் ஒன்று 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதாவது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 20 ரூபா அதிகமாக அந்த குடிநீர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள குடிநீர் போத்தல்களை, உணவகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட எந்தவொரு வர்த்தக நிலையங்களிலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும்போது, போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்த்து கொள்வனவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

