மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனது அழுத்தமான இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த நடிகை பார்வதி திருவோத்து, தான் திரைப்பட இயக்குநராக உருவெடுப்பதற்கு கடந்த 5 ஆண்டுகளாகக் காத்திருப்பதாக அண்மையில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
கதாநாயகி என்ற வழக்கமான எல்லைக்குள் சுருங்கிவிடாமல் சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அவர், திரைக்கதை எழுதுவது முதல் இயக்கத்திற்கான திட்டமிடல்கள் வரை அனைத்து முதற்கட்டப் பணிகளையும் முழுமையாக நிறைவு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகையாகத் தனக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களுக்குச் சில எல்லைகளும் வரம்புகளும் இருப்பதாகக் குறிப்பிட்ட பார்வதி, இயக்கத்தின் மூலமாக மட்டுமே தனது முழுமையான கற்பனைத் திறனை வெளிக்கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளார்.
திரைக்கதை ஒன்றை அணுகும் விதமே தனக்கு முற்றிலும் மாறிவிட்டதாகக் கூறிய அவர், கதையைப் படிக்கும்போதே ஒவ்வொரு காட்சியையும் திரையில் எவ்வாறு சித்தரிப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தனக்குச் சரியான தயாரிப்பாளர் அமையும் தருணத்திற்காகக் காத்திருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கத் தேவையான நல்ல சூழல் அமைய அனைவரும் பிராத்திக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினிமாத் துறையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்று நெகிழ்ச்சியுடன் கூறிய பார்வதியின் இந்த இயக்குநர் அவதாரம் குறித்த அறிவிப்பு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



