வடக்கு மாகாண கல்வித்துறையில் விசாரணைகள் காலதாமதமடைவதால் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காண, விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அதிபர் சேவைச் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (29) சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள், குறிப்பாக விசாரணைகள் தாமதமடைவதால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், எதிர்பார்த்த அளவில் விசாரணைகள் நிறைவடையவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு தீர்வாக தனியான விசாரணைக் குழுவை அமைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் இடமாற்றக் கொள்கை, மாகாணங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள், பாட மாற்றங்கள் மற்றும் வலயங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இடமாற்றங்கள் வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஆசிரியர்களின் ஓய்வூதியம், ஆபத்துக் கொடுப்பனவு, கஷ்ட மற்றும் அதி கஷ்ட பிரதேச பாடசாலைகள், சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் 19 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம், கல்வி வலயங்களின் வருடாந்த நாட்காட்டி தயாரிப்பு மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நியமனங்களில் நிலவும் சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பரீட்சைகள் மற்றும் போட்டிகள் ஒரே நாளில் இடம்பெறாத வகையில் கல்வி நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு வருடாந்த நாட்காட்டி உதவும் என தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாண கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை காண அனைத்து தரப்பினரும் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நலன்களுடன் மாணவர்களின் கல்வி நலனும் சமமாக கவனிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

