தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வப் பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் விவரங்களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.
அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தந்த முக்கிய கடைகளாக இருந்தாலும், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதில் கோயம்பத்தூர் மாவட்டத்திலேயே மிக அதிகமான கடைகள் அகற்றப்பட்டுள்ளன. கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள கடைகளில் தற்காலிகமாகக் கூட்டம் அதிகரித்துள்ள போதிலும், அரசின் இந்த மக்கள்நல நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக வரும் புகார்களைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
விதிமீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மற்றும் கடைகள் மீது எவ்விதத் தயவுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

