தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி, தனது அடுத்த புதிய திரைப்படத்திற்காக பிரபல இயக்குநர் மோகன் ராஜாவுடன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார். திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இயக்குநர் மோகன் ராஜா, தனது 11-வது திரைப்படமாக உருவாக்கவுள்ள இப்படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழில் ‘ஜெயம்’, ‘சம்திங் சம்திங்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம் மூலம் கிளாசிக் மாஸ் ஹிட் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தையும் இயக்கினார். தற்போது தனது வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் வேளையில், இந்த அசத்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளார்.
திரைத்துறையில் தனது 25 ஆண்டுகால பயணத்தைக் குறிப்பிட்டுள்ள இயக்குநர் மோகன் ராஜா, பெற்றோர் ஆசியோடும், குடும்பத்தின் அன்போடும், ரசிகர்களின் அளப்பரிய ஆதரவாலும் தான் எப்போதுமே வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த சிறப்புமிக்க தருணத்தில் தனது 11-வது படத்திற்காகத் தனது அன்புச் சகோதரர் கார்த்தியுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த புதிய பயணத்திற்கும் ரசிகர்களின் ஆசீர்வாதத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தை, தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தைத் தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் குறித்த பிற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், இது ஒரு குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

