அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் (Chris Wright) மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சவூதி அணுசக்தித் திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு “பெரிய அளவிலான அணுகலை” அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழங்கும்.
இந்த ஒப்பந்தமானது “அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்” மற்றும் “இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்” ஆகிய இரண்டு உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது.
உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு தரநிலைகளை இது வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தற்போது மதிப்பாய்வுக்காக அமெரிக்க காங்கிரஸுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த ஒப்பந்தம் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிலும், மத்திய கிழக்கின் முக்கிய பங்காளியான இஸ்ரேலிலும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு ஐக்கிய அரபு இராச்சியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் மிகவும் கடுமையான ஆய்வுக் கட்டுப்பாடுகளையும், சொந்தமாக அணு எரிபொருள் உற்பத்தி செய்யும் உரிமையற்ற தன்மையையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளரான மார்க்கோ ரூபியோ (Marco Rubio), உலகளவில் அணு ஆயுதப் பரவலுக்கான எந்தவொரு ஆபத்தையும் விளைவிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா ஈடுபடாது எனத் தெரிவித்தார்.




