மொன்றியல் (Montreal) மாநகரின் மேற்குத் தீவு (West Island) பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளப் பெருக்கிற்கு உள்ளூர் நகராட்சிகளின் உள்கட்டமைப்பு அலட்சியமே காரணம் எனக் குற்றம் சாட்டி, கியூபெக் மாகாண உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மொன்றியலின் வெஸ்ட் ஐலண்ட் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த கடும் மழையால் நூற்றுக்கணக்கான வீடுகளின் அடித்தளங்கள் (Basements) வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் வீட்டு உரிமையாளர்களுக்கு பல கோடி டொலர்கள் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நகராட்சிகள் வெள்ள அபாயங்களை முன்கூட்டியே அறிந்திருந்தும், தண்ணீரை உறிஞ்சி மெதுவாக வெளியேற்றும் ‘ஸ்பாஞ்ச் பூங்காக்கள்’ (Sponge Parks) அல்லது போதுமான வடிகால் அமைப்புகளை உருவாக்கத் தவறிவிட்டதாகக் கூறிப் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
‘கன்சியூமர் லா குரூப்’ (Consumer Law Group) என்ற பிரபல சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் ஜெஃப் ஓரென்ஸ்டைன் (Jeff Orenstein) மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மொன்றியல் மாநகர சபை, பியர்போண்ட்ஸ்-ரொக்ஸ்பாரோ (Pierrefonds-Roxboro) நகராட்சி வலயக் குழு மற்றும் டாலர்ட்-டெஸ்-ஒர்முவா (Dollard-des-Ormeaux) நகராட்சி ஆகியவற்றை இலக்கு வைத்துத் தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 முதல் தற்போது வரை ஒரே பிரதேசம் நான்கு முறை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், காப்பீட்டு நிறுவனங்கள் (Insurance Companies) நட்டஈடு வழங்கத் தயங்குவதாகவும், இதனால் நகராட்சியைக் கட்டாயப்படுத்தி உள்கட்டமைப்பை மாற்றவே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

