‘ரோயல் கனேடிய கடற்படைக்கான’ (Royal Canadian Navy) புதிய நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் போட்டியில், இறுதி இரண்டு சர்வதேச நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
காலாவதியாகும் நிலையில் உள்ள கனேடிய கடற்படையின் தற்போதைய நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக, 12 புதிய நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான இந்த மெகா ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு, அதன் வாழ்நாள் பராமரிப்புச் செலவுகளையும் சேர்த்து $100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் கடற்படையை நவீனமயமாக்கும் இந்த ஒப்பந்தத்துக்கான போட்டியில் ஜெர்மனியின் ‘திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ்’ (ThyssenKrupp Marine Systems – TKMS) மற்றும் தென்கொரியாவின் ‘ஹன்வா ஓஷன்’ (Hanwha Ocean) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இறுதிப் பட்டியலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
துருக்கியின் அங்காரா நகரில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) தலைவர்கள் உச்சிமாநாட்டிற்குப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) புறப்படுவதற்கு முன்பாக, ஹாலிஃபாக்ஸ் நகரில் வைத்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட நிறுவனம் எது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.
மத்திய அரசிடம் தற்போதுள்ள நான்கு விக்டோரியா-கிளாஸ் (Victoria-Class) நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒரேயொரு கப்பல் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது.எஞ்சிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தீவிரப் பராமரிப்பில் இருக்கின்றன.
இந்த நிலையில் நாட்டின் முப்பக்கக் கடற்கரைகளையும் பாதுகாக்க இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அதிவிரைவாகப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

