சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சில முக்கிய குற்றவழக்குகளின் சாட்சியாளர்கள் நாட்டில் சாட்சியமளிக்க அச்சப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தூதரகங்கள் மூலம் சாட்சியமளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதன்படி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உத்தியோகபூர்வ விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்
ஹெரோயின்: 3,390 KG , ஐஸ் : 5,543 KG , கொகெய்ன்: 304 KG
குஷ் : 1,521 KG , போதை மாத்திரைகள்: 51 இலட்சத்திற்கும் அதிகம்
ஆழ்கடலில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் மற்றும் வானூர்தி நிலையம், துறைமுக சோதனைகள் மூலம் இவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூகத்தில் மிகக் கௌரவமான நிலையில் உள்ள முக்கிய புள்ளிகளும் எவ்வித தராதரமுமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சிறைச்சாலைகளுக்குள் இருந்துகொண்டு திட்டமிட்ட குற்றக்குழுக்கள் போதைப்பொருள் நெட்வொர்க்கை இயக்குவதை முழுமையாகத் தடுப்பதற்காக, வெலிசறையில் அதிநவீன விசேட சிறைச்சாலை வளாகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
“பிரதான குற்றவாளிகள் அனைவரும் வெலிசறை விசேட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். அங்கு அனைத்துத் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறைக்குள் இருந்துகொண்டு குற்றங்களை இயக்கும் கலாசாரம் கணிசமான அளவு முடக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


