தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ அணி ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான போட்டியில், இந்திய ‘ஏ’ அணியை ‘சுப்பர் ஓவர்’ சுற்றில் வீழ்த்தி இலங்கை ‘ஏ’ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
எனினும், இந்த போட்டியின் இறுதித் தருணங்களில் இரு அணி வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக மைதானத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இரு அணிகளும் சமமாக 265 ஓட்டங்களைப் பெற்றதை அடுத்து போட்டி சமநிலையில் (Tie) முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. போட்டி நிறைவடைந்ததும் மைதானத்தில் பதற்றமான சூழல் உருவானது.
இந்திய ‘ஏ’ அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை ‘ஏ’ அணியின் விஷேன் ஹலம்பகே ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலுக்கான துல்லியமான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
இன்றைய ஆட்டத்தில் பெனால்டி ஓட்டங்கள் (Penalty Runs) வழங்கப்பட்டதில் ஏற்பட்ட சர்ச்சை, சுப்பர் ஓவர் விதிமுறைகள் குறித்த குழப்பம் மற்றும் சுப்பர் ஓவரின் போது நடுவரால் அறிவிக்கப்பட்ட ‘நோ-போல்’(No-Ball) தீர்ப்பு எனப் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின.
குறிப்பாக, நடுவரின் தீர்ப்புகளால் இந்திய ‘ஏ’ அணியின் தலைவர் திலக் வர்மா கடுமையான அதிருப்தியையும் விரக்தியையும் வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது.
முன்னதாக இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ‘ஏ’ அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் சூரியன்ஷ் ஷெட்ஜ் 72 ஓட்டங்களையும், விப்ராஜ் நிகாம் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பதிலுக்கு 266 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை ‘ஏ’ அணி, சதீர சமரவிக்ரமவின் அதிரடியான 93 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களை எட்டியது. போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியில் நடத்தப்பட்ட சுப்பர் ஓவர் சுற்றில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி 16 ஓட்டங்களைக் குவித்தது.
கடினமான இந்த இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இந்திய ‘ஏ’ அணியை, இலங்கை பந்துவீச்சாளர்கள் திறம்படக் கட்டுப்படுத்தி தங்களது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.


