பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் விதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டும் அதேவேளை, இந்த இடத்தை எமது மாகாணம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும், அடுத்த ஆண்டு இவ்வீதத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருவரும் மனதிலிருத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கிளிநொச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில், 2025ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு ஆலய முன்றலில் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சாதனை மாணவர்களைக் கௌரவித்த பின்னர் உரையாற்றுகையிலேயே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
