கியூபெக் மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ள உட்டாவே (Outaouais) பிராந்தியத்தில் வெள்ள அபாயம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக காடினோ (Gatineau) நகரில் ஓடும் ஒட்டாவா ஆற்றில் நீர்மட்டம் ஒரே இரவில் 30 சென்டிமீற்றர் உயர்ந்துள்ளதால், அங்குள்ள 164 கட்டிடங்கள் மற்றும் 41 வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
கியூபெக் மாகாணம் முழுவதும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு பதிவாகியுள்ள நிலையில், உட்டாவே பிராந்தியமே அவற்றுள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
காடினோவுக்கு மேற்கே அமைந்துள்ள போர்ட்-கூலோன்ஜ் (Fort-Coulonge) பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மார்ச்சண்ட் பாலம் (Marchand Bridge) பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளது.
ஒட்டாவா ஆற்றில் ஏற்படும் நீர் உயர்வு, மொன்றியலைச் சுற்றியுள்ள ரிவியர் டெஸ் பிரைரிஸ் (Rivière des Prairies) ஆற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பியர்ஃபோண்ட்ஸ் (Pierrefonds) மற்றும் லாவால் பகுதிகளில் தற்காலிக அணைக்கட்டுகள் மற்றும் நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வெள்ள நிலைமை குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட், நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது எனத் தெரிவித்தார். எனினும், காலநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய வெள்ளச் சம்பவங்கள் கியூபெக் மாகாணத்தில் அடிக்கடி நிகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தீயணைப்புப் படையினர் பாதிக்கப்படக்கூடிய வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களை எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
