கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) மாகாணத்தின் கடுமையான மொழிக்காப்புச் சட்டமான பில் 101 இல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, இதுவரை ஆங்கில மொழியில் தடையின்றி இயங்கி வந்த வயதுவந்தோர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு (Adult Vocational Training) இனி பிரெஞ்சு மொழிச் சட்டங்கள் பொருந்தும் என அவர் அறிவித்துள்ளார். கியூபெக்கில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயில்வதற்கு, பல கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால், தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய குடியேறிகள் மற்றும் பிற மொழியினர் ஆங்கில வழியில் பயில இதுவரை எவ்வித தடையும் இருக்கவில்லை. இந்த நிலையில், தற்போது கியூபெக்கில் ஆங்கில வழியில் தொழிற்பயிற்சி பெற வேண்டுமானால், அவர்கள் கனடாவின் "ஆங்கில வழி கல்விக்கான வரலாற்று உரிமை (Historic rights) பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படவுள்ளது.
மாகாணத்தின் பணிச் சூழலில் பிரெஞ்சு மொழியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும், புதிய குடியேறிகள் வேலைக்குச் செல்லும் போது பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பதை உறுதி செய்யவும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
இந்த அறிவிப்பு மொன்றியல் ஆங்கில பாடசாலை சபை (EMSB) உள்ளிட்ட ஆங்கில மொழி கல்வி நிறுவனங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்தால் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கியூபெக் மாகாணத்தில் ஏற்கனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், மொழி அடிப்படையில் பயிற்சிகளைத் தடுப்பது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
