கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள டெரெபோன் (Terrebonne) பாராளுமன்றத் தேர்தல் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில், அந்த முடிவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மறுதேர்தல் நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் வேட்பாளர் டாட்டியானா ஆகஸ்ட் (Tatiana Auguste), பிளாக் கியூபெக்வா வேட்பாளர் நத்தலி சின்க்ளெயரை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
தபால் மூலமான வாக்குகளைக் கையாள்வதில் தேர்தல் ஆணையம் செய்த சிறு தவறு காரணமாக ஒரு வாக்கு எண்ணப்படாமல் போனது. இதனை ஏற்றுக்கொண்ட கனடிய உயர் நீதிமன்றம், அந்தத் தேர்தல் முடிவைச் செல்லாததாக அறிவித்ததுடன் அந்த டெரெபோன் (Terrebonne) தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், இந்தத் தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu லிபரல் கட்சியில் இணைந்ததையடுத்து, பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தைப் பெற இன்னும் ஒரு இடம் தேவைப்படுகின்றது.
தற்போது இந்த டெரெபோன் (Terrebonne) தொகுதியில் வெற்றி பெற்றால் லிபரல் கட்சி ஒரு நிலையான பெரும்பான்மை ஆட்சியை அமைக்கும் நடைபெறப்போவது ஒரு இடைத்தேர்தல் என்றாலும் டெரெபோன் தேர்தல் தொகுதியின் மக்கள் இதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த முன்னோடி வாக்கெடுப்பில் (Advance Polls) சுமார் 18,200 பேர் வாக்களித்துள்ளனர். திங்கட்கிழமை இரவு வெளிவரவுள்ள இந்த தேர்தலின் முடிவுகள் நாட்டின் அடுத்த சில ஆண்டுகால அரசியலைத் தீர்மானிக்கும் என்பதால் நாடு முழுவதும் டெரெபோனை உற்று நோக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
