மொன்றியலின் ரிவியர்-டெஸ்-பிரெய்ரிஸ் (Rivière des Prairies) ஆற்றுக்குள் விழுந்து காணாமல் போன 18 வயது மாணவனைத் தேடும் பணியை மொன்றியல் பொலிஸார் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல், ஈல்-பிசார்ட் (Île-Bizard) பகுதியில் 17 மற்றும் 18 வயதுடைய இரு மாணவர்கள் உறைந்த ஆற்றுப் பரப்பின் மீது நடந்து சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பனிப்பாளம் உடைந்ததில் இருவரும் ஆற்றின் தண்ணீருக்குள் விழுந்தனர்.
17 வயதுடைய மாணவன் மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், 18 வயதுடைய மாணவன் ஆற்று நீரின் கடும் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இவர் செஜெப் ஜெரால்ட்-கோடின் (Cégep Gérald-Godin) கல்லூரியைச் சேர்ந்த மாணவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழன் முதல் ஞாயிறு வரை மொன்றியல் பொலிஸார் (SPVM) ட்ரோன்கள், நவீன கமராக்கள் மற்றும் படகுகளைப் பயன்படுத்தித் தீவிரமாகத் தேடினர்.
எனினும், ஆற்றில் நீரோட்டம் மிக வேகமாக இருந்ததாலும், பனிப்பாறைகள் உருகி ஆபத்தான நிலையில் இருந்ததாலும் தேடுதல் பணியில் பெரும் சவால்கள் நிலவின. தற்போது தற்காலிகமாகப் பணிகளை நிறுத்தியிருந்தாலும், வரும் நாட்களில் ஆற்றின் கரையோரங்களில் கண்காணிப்புப் பணிகள் தொடரும்என மொன்றியல் பொலிஸ் பேச்சாளர் ஜீன்-பியர் பிரபான்ட் தெரிவித்துள்ளார்.
