மொன்றியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (YUL) வசந்தகால விடுமுறை (Spring Break) காலப்பகுதியை முன்னிட்டு, கடும் போக்குவரத்து நெரிசலையும் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறையையும் பயணிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என விமான நிலைய நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அந்த விமான நிலையத்தில் தற்போது, சுமார் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதே இந்தத் திடீர் நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். அடுத்த 10 நாட்களில் நாளொன்றுக்குச் சுமார் 58,000 பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொன்றியல் ட்ரூடோ விமான நிலையத்தின் முக்கிய வாகனத் தரிப்பிடம் (Parking Garage) தற்போது இடிக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்த இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு அல்லது சர்வதேசப் பயணம் எதுவாக இருந்தாலும், விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் உள்ள நெரிசலைத் தவிர்க்க, P4 மற்றும் P10 ஆகிய மாற்று இறங்குதளங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிருந்து விமான நிலையத்திற்குச் செல்ல இலவச சிற்றுந்து வசதிகள் 24 மணிநேரமும் வழங்கப்படுகின்றன. மொன்றியல் ட்ரூடோ விமான நிலையத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியங்கள் தற்காலிகமானவை என, விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
