மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை (29) காலை மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் தனது அரச கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த கும்பல் குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட தோடு, அவரை தகாத வார்த்தைகளால் பேசி அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர் ஒரு பெண் கிராம அலுவலர் என்பதால் அவரது கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கு கிராம அலுவலர்கள் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டித்ததோடு,இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன்னாள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஒன்று கூடி கருப்பு பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை தெரிவித்தனர்.
குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட குறித்த நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
