2026ம் ஆண்டுக்கான ICC உலகக்கிண்ண T20 தொடரானது பெப்ரவரி 7ஆம் திகதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (28) அறிவித்துள்ளது.
இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் , நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, கனடா, நபீமியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 20 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடரின் முதல் போட்டி பெப்ரவரி 7ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாவதுடன் இறுதிப் போட்டி மார்ச் 8ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் குழு ஏ பிரிவில் நடப்பு சம்பியனான இந்திய அணி மற்றும் அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில்,உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட T20 பலப்பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் அறிவித்துள்ளன.
மேலும், இலங்கையில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் ரங்கிரி தம்புளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியில் அப்துல் சமத், அப்ரார் அஹ்மத், பகர் ஜமான், சைம் அயுப், சாஹிப்சாதா பர்ஹான், நசீம் ஷா போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் தங்களின் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். இதுதவிர்த்து அனுபவ சகலதுறை ஆட்டக்காரர் ஷதாப் கானும் மீண்டும் பாகிஸ்தான் T20 அணியில் இடம் பிடித்துள்ளார்.
![]()


