வருடா வருடம் மன்னார் நகர சபை எல்லைக்குள் பண்டிகைக் கால வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான கேள்வி கோரல் மற்றும் விண்ணப்பங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(18) காலை தொடக்கம் மன்னார் நகர சபையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
ஆண்டுதோறும் டிசம்பர் 20 திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகையை முன்னிட்டு நடை பாதை பண்டிகை கால வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள குத்தகை கேள்வி மூலம் மன்னார் நகரசபை அனுமதி வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான பண்டிகைக் கால வியாபார நிலையங்களை குத்தகை மூலம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வர்த்தகர்களுக்கு வழங்கும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை முதல் நாளை வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
அதன் அடிப்படையில் அதிக குத்தகை தொகையை கோரும் உரிமையாளர்களுக்கு கடைகள் அமைப்பதற்கான இடங்கள் வழங்கப்பட்டு தற்காலிக வியாபார நிலையங்கள் அமைத்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க நகர சபையினால் அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம் பெற்று எதிர்வரும் 20 ஆம் திகதி அதிகூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தகர்களுக்கு இடம் வழங்கப் பட்டு வர்த்தக நிலையம் அமைக்கப்படும்.
கடந்த வருடம் மன்னார் நகர சபை எல்லைக்குள் பண்டிகை கால வியாபார நிலையங்களை குத்தகை அடிப்படையில் வழங்கியதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு மூன்று கோடியே இருபது லட்சம் ரூபா வருமானம் கிடைக்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.
