கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 8ம் திகதி கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணையின் அடிப்படையில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில், பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சிஜடி யினர் தேடி வந்துள்ள நிலையில், அவர் குவைத் நாட்டிற்கு தப்பி, தலைமறைவாகி இருந்து வந்துள்ள அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் திரும்பி நாட்டிற்கு வந்துள்ள நிலையில் சம்பவ தினமான இன்று(17) புதன்கிழமை காலையில் அவரது வீட்டில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


