நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று(24) அறிவித்துள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 2ம் திகதி கிறிஸ்ட்சர்ச்சிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 10ம் திகதி வெலிங்டனிலும், மூன்றாவது போட்டி டிசம்பர் 18ம் திகதி மௌண்ட் மௌங்கானுயிலும் நடைபெறவுள்ளது.
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோர் உபாதை காரணமாக இடம்பிடிக்கவில்லை. இதன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கீமார் ரோச், கவெம் ஹாட்ஜ், அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஓஜே ஷீல்ட்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் டெஸ்ட் அணியில் திரும்பவும் இடம்பிடித்துள்ளார். முன்னதாக இவர் கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில், அதன்பின் எந்தவொரு சர்வதேச டெஸ்டிலும் உபாதை காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில் தற்சமயம் சீரான உடற்தகமை காரணமாக அணியில் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான டோம் லேதம் தலைமையிலான 14 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி இன்று(24) அறிவிக்கப்பட்டுள்ளது.


