நோவா ஸ்கோஷியா மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் டி’என்ட்ரெமான்ட், ஆளும் லிபரல் கட்சிக்குத் தாவியதற்கான முடிவை, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே “உறுதிப்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.
தாம் கட்சியிலிருந்து விலகுவது குறித்துச் செய்தி வெளியான பின்னர், கன்சர்வேடிவ் சபை தலைவர் ஆண்ட்ரூ ஷீர் மற்றும் கட்சியின் கொரடா கிறிஸ் வார்கென்டின் ஆகியோர் தனது அலுவலகத்திற்குள் “திடீரெனப் புகுந்து”, தனது உதவியாளரைத் தள்ளிவிட்டு, தன்னைக் “கொடூரமானவர்” என்று உரத்த குரலில் சத்தமிட்டதாகவும் டி’என்ட்ரெமான்ட் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொலிவரின் “எதிர்மறையான” தலைமைத்துவத்தினை ஏற்க மறுத்ததாக ஏற்கனவே கூறியிருந்த டி’என்ட்ரெமான்ட், தனது அலுவலகத்தில் அவர்கள் நடந்து கொண்ட முறை, தனது முடிவினை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கன்சர்வேடிவ் அணியின் சூழல், “ஒரு தீவிர அரசியல் கட்சியைப் போல இல்லாமல், சாதாரண மாணவர் விடுதியின் ஒரு பகுதியைப் போல” இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
