1995-ஆம் ஆண்டு நடந்த கியூபெக் மாகாணத்தின் பிரிவினைக்கான
வாக்கெடுப்பானது (Quebec Referendum) கனடாவைப் பிளவுபடுத்தும் அபாயத்தின் விளிம்பில் இருந்தபோது, அன்றைய பிரதமர் ஜீன் கிரெட்டியன்
(Jean Chrétien) தனது அமைச்சரவைக்கு வழங்கிய இரகசிய
அறிவுறுத்தல்கள் இப்போது வெளியாகி உள்ளன.
நாட்டைப் பிரிக்கும் அபாயம் இருந்தபோதும், அமைதியாகவும்,
அவசரப்படாமலும் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியது,
அந்நாட்களின் பதற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
கனடாவின் முன்னாள் பிரதமரின் அலுவலக இரகசிய அமைச்சரவைக்
குறிப்புகள் (Federal Cabinet Minutes) தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்
கீழ் (Access to Information) வெளியிடப்பட்டுள்ளன.
வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, 1995
அக்டோபர் 24 அன்று, பிரதமர் ஜீன் கிரெட்டியன் தனது அமைச்சர்களிடம், ஒருவேளை கியூபெக் மக்கள் கனடாவிலிருந்து பிரிவதற்கு வாக்களித்தால் "யாரும் பீதியடையவோ அல்லது அவசரமாகவோ செயல்படக்கூடாது"என்று அறிவுறுத்தினார்.
வாக்கெடுப்பின் விளைவுகள் குறித்து விவாதிக்க அது சரியான நேரம் அல்ல என்றும், அமைதியாக இருப்பது அவசியம் என்றும் கிரெட்டியன் தனது அமைச்சர்களிடம், குறிப்பிட்டுள்ளார்.
வாக்கெடுப்புக்குப் பல மாதங்களுக்கு முன்னர் நடந்த அமைச்சரவைக்
கூட்டங்களில், கியூபெக் பிரிவினைக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு மாகாண அரசு அஞ்சுகிறது என்றும், அது நடைபெறவே வாய்ப்பில்லை என்றும் கிரெட்டியன் நம்பிக்கை கொண்டிருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.