யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
யாழ். புனித யுவானியர் தேவாலய முன்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது.
குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டுப் பெரு விழாவில், 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் – பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், “யாழ்ப்பாணம் – 4” (மரபுகளும் நம்பிக்கைகளும்) நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
தொடர்ந்து நிகழ்வில் “யாழ் முத்து” விருது 15 கலைஞர்களுக்கும், இளங்கலைஞர் விருது 15 கலைஞர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை மாவட்ட செயலர் இமெல்டா சுகுமார் மற்றும் அவரது கணவர் கே. சுகுமார் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் தர்சினி நிதர்சனும், கெளரவ விருந்தினராக அளவெட்டி நாதஸ்வர கலாநிதி இரத்தினவேல் கேதீஸ்வரன் கலந்து கொண்டனர்.